கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பள்ளிகள் கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டன தற்போது கொரோனா தாக்கம் ஓரளவு கட்டுக்குள் வந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்படுமா? என்ற கேள்வி மக்களிடையே எழுந்தது. இதனையடுத்து 2020 – 2021 ஆம் ஆண்டு பாடங்கள் ஆன்லைன் வழியாகவும், கல்வி தொலைக்காட்சி, மற்றும் யூட்யூப் மூலமாகவும் மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 9 ,10, 11 ,12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகளை நடத்த பெற்றோரிடம் கருத்து கேட்கப்பட்டது. பெரும்பாலான பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த முடிவு கைவிடப்பட்டது. தற்போது 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நெருங்கி வருவதால் பள்ளிகளை திறக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கலாமா? என்று கடந்த 6 ,7, 8ம் தேதிகளில் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில் பெற்றோர் பள்ளிகள் திறப்பதற்கு ஆதரவு தெரிவித்து வந்தனர் என அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து 19ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கலாம் என அரசு முடிவு எடுத்துள்ளது. அதன்படி இன்று 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.10 மாத காலத்திற்கு பிறகு இன்று பள்ளிகள் திறப்பது மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிக்கூடத்திற்கு செல்கின்றனர். மேலும் மாஸ்க், சானிட்டேசரால் கை கழுவுதல் உள்ளிட்ட விதிமுறைகளுக்குப் பின்பே பள்ளிக்கூடத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.