தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் சமயத்தில் அரசியல் கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்ட நிலையில் தொகுதி பங்கீடு குறித்து மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க 60 தொகுதிகள் கேட்பதாகவும், தே.மு.தி.க 41 தொகுதிகளை கேட்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் சீட் வழங்குவதில் அ.தி.மு.க தயக்கம் காட்டுவதால் இழுபறி நீடிக்கிறது. இதனால் தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அ.தி.மு.க-வை சீண்டும் விதமாக கருத்துகளை பேசிவருகிறார்.
தான் ஒரு பெண் என்ற முறையில் சசிகலாவை வரவேற்பதாகவும். அவர் மீண்டும் அரசியலில் ஈடுபட வேண்டும் எனவும் பேசியிருந்தார். அதுமட்டுமல்லாது ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவை அ.தி.மு.க-வினர் எதிர்ப்பது ஏன் என்று தெரியவில்லை என்றும் கருத்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க அலுவலகத்தில் தேர்தல் சம்பந்தமாக நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் சற்று காட்டமாகவே பேசியிருக்கிறார் பிரேமலதா. அ.தி.மு.க கூட்டணியில் உரிய முக்கியத்துவமும், மதிப்பும் அளிக்காமல் இருந்தால் 234 தொகுதிகளிலும் நாம் தனித்து போட்டியிடவும் தயாராக இருக்க வேண்டும் என பேசியுள்ளார். மேலும் தேர்தல் தொடர்பான முக்கிய அறிவிப்பை தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் நாளை அறிவிக்க உள்ளதாகவும் பிரேமலதா பேசியிருப்பது தமிழக தேர்தல் களத்தை சூடாக்கியுள்ளது