சி.பி.ஆர் சிகிட்சை பற்றி நம்மவர்களுக்கு நன்கு அறிமுகம் உண்டு. அதற்குக் காரணம் தளபதி விஜய். ஆம், விமானநிலையத்தில் வேட்டி, சட்டையோடு இருப்பார் விஜய். திடீர் என கீழ்தளத்தில் ஒரு பெண் மயங்கி சரிவார். அவரது இதயம் செயல்பாட்டை நிறுத்திக்கொள்ளும். உடனே எகிறிகுதித்து ஓடிப்போய் விஜய் சி.பி.ஆர் சிகிட்சை செய்து அந்தப்பெண்ணைக் காப்பாற்றுவார். இப்படியொரு காட்சி விஜயின் மெர்சல் படத்தில் இருக்கும். அதேபோல் ஒருவர் குட்டியானையை காப்பாற்றி இருக்கிறார்.
தாய்லாந்து நாட்டில் யானை குட்டி ஒன்று தண்ணீரைக் குடிக்க சாலையைக் கடந்தது. அப்போது அந்த வழியாக வந்த டூவீலர் ஒன்று குட்டியானையின் மீது மோதியது. இதில் குட்டி யானை உடனே இதயம் நின்று மயங்கி சரிந்தது. சாந்தாபுரி பகுதியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. விபத்து நடந்ததும் யானை இறந்தது போல் கிடப்பது குறித்து தெரியவந்ததும் வன மருத்துவர்கள் விரைந்துவந்தனர். அவர்கள் யானையின் இதயம் இருக்கும் பகுதியில் மனிதர்களுக்கு சிகிட்சை அளிப்பது போல் இரு கையாலும் அழுத்தினர். இதன் பலனாக பத்தே நிமிடத்தில் யானைக்குட்டி இதயத்துடிப்பு வந்து எழுந்து நின்றது.