ஸ்பாட்டில் இருக்கும்போது சித்ராவுக்கு தொடர்ந்து போன் அழைப்பு வந்துகொண்டேயிருந்திருக்கிறது. நாங்கள் தொடர்புகொள்ளும் போதெல்லாம் அவருடைய போன் வெயிட்டிங்கில் போனது.
சின்னத்திரை நடிகை சித்ரா, தற்கொலைதான் செய்துகொண்டார் என அறிவித்திருக்கிறது காவல்துறை. ஆனால், தற்கொலைக்கான காரணம் என்ன என்பது இன்னமும் கண்டறியப்படாமலேயே இருக்கிறது. சித்ராவின் மரணம் குறித்து அவருக்கும், அவர் கணவர் ஹேமந்துக்கும் நெருக்கமாக இருந்த சிலரிடம் பேசினோம்.
“ஹேமந்த் மிகவும் பொசசிவ் ஆனவர். இதனால் சித்ராவுக்கும் அவருக்கும் இடையில் அடிக்கடி சண்டைகள் நடந்தது உண்மை. ஒருமுறை ஹேமந்த் கையைக் கிழித்துக்கொண்டதும் உண்மை. ஆனால், எவ்வளவு சண்டைபோட்டாலும் உடனடியாக சமாதானம் ஆகிவிடுவார்கள். கொரோனா லாக்டெளனுக்குப் பிறகான ஷூட்டிங் அத்தனைக்கும் ஹேமந்த்தான் ஸ்பாட்டுக்கு சித்ராவை அழைத்துக்கொண்டு வருவார். திரும்ப அழைத்துக்கொண்டு போவார். சித்ரா கடைசியாக ஷூட்டிங் சென்ற செவ்வாய்கிழமை (08-12-2020) அன்றும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ஹேமந்த் போயிருக்கிறார். ஸ்பாட்டில் இருக்கும்போது சித்ராவுக்கு தொடர்ந்து போன் அழைப்பு வந்துகொண்டே இருந்திருக்கிறது. நாங்கள் தொடர்புகொள்ளும்போதும் அன்று பலமுறை அவருடைய போன் வெயிட்டிங்கில் போனது. புதன்கிழமை அதிகாலை 2.30 மணியளவில்தான் ப்ளசன்ட் டே ஹோட்டல் அறைக்கு வந்திருக்கிறார் சித்ரா. அப்போதுமே அவருக்கு போன் வந்திருக்கிறது. அறைக்கு வந்தவர், ‘கீழே காரில் ஹேண்ட்பேக்கை மறந்து வைத்துவிட்டேன். போய் எடுத்துக்கொண்டு வா’ என ஹேமந்த்தை அனுப்பியிருக்கிறார்.
அப்போது அவர்களுக்குள் எந்த சண்டையும் நடக்கவில்லை. ஹேண்ட்பேகை எடுத்துகொண்டு மேலே வந்த ஹேமந்த்தால் அறைக்கதவை திறக்கமுடியவில்லை. குளித்துக்கொண்டிருப்பார் என நீண்டநேரம் வெளியே காத்திருந்திருக்கிறார். போனுக்கும் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டே இருந்திருக்கிறார். சித்ரா அழைப்பை எடுக்கவில்லை. ஹோட்டல் ஊழியரை அழைத்து மீண்டும் அறைக்கதவைத் திறக்க முயன்றிருக்கிறார். கதவைத் திறக்கமுடியவில்லை. கடைசியில் கதவை உடைத்துத்தான் உள்ளே போயிருக்கிறார்கள். தன்னுடைய புடவையில் தூக்குப் போட்டுக்கொண்டிருந்திருக்கிறார் சித்ரா. ஹேமந்த் மற்றும் ஹோட்டல் ஊழியர்கள் உடனடியாக அவரைக்கீழே இறக்கி முதலுதவி கொடுத்திருக்கிறார்கள். ஆனால், சித்ராவிடம் எந்த அசைவும் இல்லை என்றதும் 108-க்கு அழைத்திருக்கிறார்கள். அவர்கள் வந்து சித்ரா இறந்து அரை மணி நேரமாகிவிட்டது என்றதும்தான் போலீஸுக்குத் தகவல் கொடுத்திருக்கிறார்கள்” என்றார்கள் சித்ராவுக்கு மிக நெருக்கமான நண்பர்கள்.
சித்ராவின் முகத்தில் இருந்த காயங்கள் குறித்து கேட்டோம். “முகத்தில் காயங்கள் சித்ராவாலேயே கூட ஏற்பட்டிருக்கலாம். கடைசிநேரத்தில் அவர் உயிருக்குப்போராடும்போது அந்த காயங்கள் ஏற்பட்டிருக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது” என்றார்கள். திருமணம் பிப்ரவரியில்தான் எனும்போது அக்டோபரிலேயே ஏன் பதிவுத் திருமணம் செய்துகொண்டார்கள் எனக் கேட்டோம். “அவர்கள் நிச்சயதார்த்துக்குப்பிறகே ஒன்றாக வாழ ஆரம்பித்துவிட்டார்கள். இதனால் யாரும் தவறாகப் பேசிவிடக்கூடாது என்பதற்காக பதிவுத்திருமணம் செய்துகொண்டார்கள்.
மேலும், சித்ராவுக்கு நிறைய லோன்கள் இருந்தன. வீட்டு லோன், கார் லோன் என வங்கிகளில் அவருக்கு நிறைய கடன் இருந்தது. சமீபத்தில் அவர் ஆடி கார் வாங்கினார். சென்னை தி.நகரில் அலுவலகம் இருக்கிறது. அந்த அலுவலகத்தின் வாடகையே 1 லட்சம் ரூபாய். அவர்களுக்கு அதிக செலவுகளும் இருந்தன. எந்த அழுத்தத்தின் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டார் என்பது எங்களுக்கே இன்னமும் புரியவில்லை. ஆனால், அவர் தற்கொலை செய்துகொள்ளும் நபரே அல்ல. மிகவும் தைரியமானவர். மிகுந்த தன்னம்பிக்கை கொண்டவர். எந்த சூழலையும் சமாளித்து வெளியே வந்துவிடலாம் என்று நினைக்கக்கூடியவர். அவர் எப்படி இப்படி செய்துகொண்டார் என்பது புரியவில்லை. செவ்வாய்கிழமை பலமுறை தொடர்ந்து போனில் பேசியது யார் என்பது தெரிந்தால் மட்டுமே பல கேள்விகளுக்கான விடை கிடைக்கும். சித்ராவின் செல்போன் போலீஸிடம்தான் இருக்கிறது. ஹேமந்த்தும் இன்னும் போலீஸ் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறார். போலீஸ்தான் விசாரணை விவரங்களை வெளியிடவேண்டும்” என்றார்கள் அவரது நண்பர்கள்.