சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்துவிட்டாலும் இப்போதைக்கு பெங்களூரு மருத்துவமனையில் சிகிட்சையில் இருக்கிறார். சசிகலாவுக்காக போயஸ் கார்டனல் ஜெயலலிதா வீட்டிற்கு நேர் எதிரில் இருக்கும் வீடு தயாராகி வருகிறது. மழைக்கு முன் வரும் தூவானம் போல சசிகலாவின் வருகைக்கு முன்பே அதிமுகவினர் சிலரே அவரை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டி வருவது பரப்பரப்பை பற்றவைத்துள்ளது.

அதேபோல் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிகவின் மாநில பொருளாளர் பிரேமலதாவும் சசிகலா அரசியலுக்கு வரவேண்டும் என பேசிவருகிறார். இப்படியெல்லாம் சசிகலா மீண்டும் அதிமுகவுக்குள் வருவது குறித்து பேச்சுகள் நிலவிவரும் நிலையில், நமது எம்.ஜி.ஆரில் சசிகலாவின் சிறைவாழ்க்கைக்குப் பின்னான ஒரு கடிதம் இப்போது அதிமுகவுக்குள் நிலவும் குழப்பங்கள் குறித்து சூசகமாக சொல்கிறது.

நமது எம்.ஜி.ஆரில் அந்த கட்டுரையின் சாரம்சம் இதுதான். ‘’அதிமுகவில் இருந்து எத்தனை தீயசக்திகளோடு சேர்ந்து துரோகக் கூட்டங்கள் திட்டம் தீட்டினாலும் அவை அனைத்தும் புஸ்வாணம் ஆகிவிடும். பதவிக்கு வரும்வரை மண்டியிட்டு, கைகட்டி, சரணாகதி அடைந்து நிற்பதும், பதவிக்கு வந்த பின்னர் பச்சை சந்தர்ப்பவாத அரசியல் நடத்தும் துரோகிகளுக்கு நாவடக்கம் வேண்டும்!
சீண்டுவார் இன்றி கிடந்தவரை சிம்மாசனத்தில் அமரவைத்த தியாகத் தலைவிக்கு காட்டும் விசுவாசும் இது தானா ? சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பதற்கு 100% வாய்ப்பில்லை என மனசாட்சியை விற்று, நன்றி கெட்ட மனிதராக வலம் வருபவர்கள் சரித்திரத்தில் நம்பிக்கை துரோகிகள், பச்சோந்திகள் என்றே அடையாளப்படுத்தப்படுவார்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெயரை குறிப்பிடாமல் கடும் விமர்சனம் செய்துள்ளது அந்நாளேடு. கூடவே சசிகலா தலைமையில் அதிமுக மீட்டெடுக்கப்படுவதை இனி எந்த கொம்பனாலும் தடுக்கமுடியாது.’’எனவும் கூறியுள்ளது.