பா.ஜ.க தகைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜா சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தி.மு.க சந்தித்த முதல் தேர்தலில் மூன்று படி அரிசி வழங்குவோம் என தேர்தல் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றினார் அண்ணா. 2006 தேர்தலில் இரண்டு ஏக்கர் நிலம் வழங்கப்படும் என அறிவித்து கருணாநிதி ஏமாற்றினார். அடுத்ததாக அரசு பணத்தில் இலவச டி.வி வழங்கினர் கருணாநிதி. அதன் மூலம் அவர்களின் டி.வி நிறுவனங்களுக்கு வருமானம் வந்தது என்பதால் அதை செயல்படுத்தினார்.

திருத்தணியில் கொடுக்கப்பட்டது வெள்ளி வேல் என்பதால் தான் ஸ்டாலின் அதை வாங்கினார். சாதாரண வேல் என்றால் ஸ்டாலின் வாங்கியிருக்கவே மாட்டார். ஸ்டாலின் முதல்வராக முடியாது. நில அபகரிப்பு சட்டமே தி.மு.க-விற்காகத்தான் கொண்டுவரப்பட்டது. ஊழல் என்றாலே தி.மு.க தான். வேல் கையில் ஏந்திய ஸ்டாலின் தைப்பூசத்திற்கு வாழ்த்து தெரிவித்திருந்தால் அவர் இந்து விரோதி அல்ல என்று ஏற்றுக்கொள்வேன். சிறையில் இருந்து விடுதலை ஆன சசிகலா இனி சுதந்திர பறவை. அ.தி.மு.க கொடி கட்டிய காரில் செல்வது அவரின் சொந்த விருப்பம்” என்றார்.