மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறை தண்டனை பெற்று, இன்று காலை விடுவிக்கப்பட்டார். பெங்களூர் மருத்துவமனையில் இருக்கும் அவர் உடல்நில சீரானதும் சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் சசிகலாவை வரவேற்று திருநெல்வேலி மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் மன்ற இணைச் செயலாளர் சுப்பிரமணிய ராஜா போஸ்டர் ஒட்டியுள்ளார்.
அந்த போஸ்டரில், அ.இ.அ.தி.மு.க-வை வழிநடத்த வருகைதரும் பொதுச் செயலாளர் அவர்களே வருக, வாழ்க, வெல்க எனகுறிப்பிடப்பட்டிருந்தது. சசிகலா புகைப்பட பெரிதாக அச்சிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் போஸ்டர் ஒட்டிய நிர்வாகியை அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் கழக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர். அவர்கள் கூட்டாக வெளியிட்ட அறிவிப்பில், “கழக கொள்கை- குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும், கழகத்திற்கு அவப்பெயர் உண்டாகும் விதத்தில் நடந்துகொண்டதாலும் சுப்ரமணிய ராஜா கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது” என கூறப்பட்டுள்ளது. சசிகலா சென்னை வந்ததும் அவரை சுப்பிரமணிய ராஜ சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.