வழக்கமாக நவம்பர் மாத இறுதியில் நாடாளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத் தொடர் கூட்டப்படுவது வழக்கம். ஆனால் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாகவும் அதிலும் குறிப்பாக புது தில்லியில் அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டும், இந்த வருடம் குளிர் கால கூட்டத்தொடர் ரத்துச் செய்யப்படலாம் என கூறப்பட்டது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மக்களவை செயலகம் கூட்டத் தொடரை நடத்த தயாராக உள்ளது என்றும் கூட்டத்துக்கான தேதியை பொருத்தவரை பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை கமிட்டி தான் முடிவு செய்யும் என்றும் தெரிவித்தார்.
வழக்கமாக பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை கமிட்டி கூட்டத் தொடருக்கான தேதிகளை முடிவு செய்து எதிர் கட்சிகளுடன் அலோசித்து அறிவிப்பது வழக்கம்.
இதற்கிடையில் டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக விவாதிப்பதற்காக மக்களவையை குறுகிய காலத்திற்கு கூட்ட வேண்டும் என மக்களவை காங்கிரஸ் கட்சியின் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். கொரோனா காரணமாக மக்களவையில் அங்கம் வகிக்கும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மக்களவை குளிர்கால கூட்டத் தொடரை ஒத்தி வைக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அதனடிப்படையில் அரசு 2021 ஜனவரியில் பட்ஜெட் கூட்டத் தொடரை கூட்ட உள்ளதாகவும் இந்த கடிதத்துக்கு பதிலளித்துள்ள பாராளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்