தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று கவர்னர் உரையுடன் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் கவர்னர் உரையை புறக்கணித்துவிட்டு எதிர்கட்வி தலைவர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பு செய்தது குறித்து ஸ்டாலின் கூறுகையில், “மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ஒரு லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால், தமிழகம் பயன்பெற்றுள்ளது என கவர்னர் தெரிவித்துள்ளார். அது தமிழக மக்களுக்கு மத்திய அரசு அளித்த லாலிபாப் என நான் ஏற்கனவே கூறியிருந்தேன். 2015 மத்திய பட்ஜெட்டில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்காக் 2019-ம் ஆண்டு மதுரையில் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
இதுவரை அதற்காக ஒரு செங்கலை கூட எடுத்து வைக்கவில்லை. எனவேதான் மத்திய பட்ஜெட் தமிழக மக்களுக்கு அளித்த லாலிபாப் என விமர்சனம் செய்தேன். பெட்ரோல், டீசல், கியாஸ் விலையை உயர்த்தியுள்ளார்கள். கவர்னர் பேசும் போது, அமருங்கள் இது கடைசி பட்ஜெட் என தெரிவித்தார். அது தான் உண்மை, அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் இது. எனவே கவர்னர் கூறியதை வரவேற்கிறோம்.

அதிமுக அரசு, முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் தொடர்பாக ஆதாரங்களுடன் கடந்த டிசம்பரில் புகார் அளித்தேன். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ஊழலுக்கு கவர்னர் துணை நிற்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேர் விடுதலை குறித்து தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும் கவர்னர் முடிவு எடுக்கவில்லை. இதையெல்லாம் கருத்தில்கொண்டுதான் கவர்னர் உரையை புறக்கணித்தோம். மேலும் கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்” என்றார்.