குடியுரிமை திருத்தச் சட்டமான சி.ஏ.ஏ நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. பின்னர் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ம் தேதி இந்த சட்டத்துக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்திருந்தார். குடியுரிமை திருத்தச் சட்டம் 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நம் பக்கத்து நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் சிறுபான்மையினராக இருந்து இந்தியாவுக்கு வந்துள்ள இந்து, கிறிஸ்தவர், சீக்கியர் உள்ளிட்டோருக்கு குடியுரிமை வழங்க இந்த சட்டம் வழிவகை செய்கிறது.
இந்த சட்டத்தை எதிர்த்து சில அமைப்புகள் நாட்டின் பல பகுதிகளில் போராட்டம் நடத்தின. கொரினா பரவல் தொடங்கியதால் போராட்டத்தை கைவிட்டனர். இந்த நிலையில் லோக்சபாவில் கேள்வி நேரத்தின்போது மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்து மூலமாக சி.ஏ.ஏ குறித்து அளித்த பதிலில், “சி.ஏ.ஏ சட்டத்திற்கான விதிகளை உருவாக்க நாடாளுமன்றத்தின் இரண்டு சபைகளின் துணைக் குழுக்கள் கால அவகாசம் அளித்துள்ளன. லோக்சபா துணைக் குழு ஏப்ரல் 9-ம் தேரி வரையும், ராஜ்யசபா துணைக் குழு ஜூலை 9-ம் தேதி வரையும் கால அவகாசத்தை நீட்டித்துள்ளன. இந்த சட்டத்துக்கான விதிகளை உருவாக்கும் பணிகள் நடந்து வருகின்றன” என அந்த பதிலில் கூறப்பட்டுள்ளது.