அமெரிக்கா நாட்டின் தெலாவரில் 50 ஆண்டு பழமை வாய்ந்த கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று இருந்தது. இந்த கிறிஸ்தவ தேவாலயம் செயல்படாமல் இருந்துள்ளது. இதையடுத்து குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் மணிநகர் பகுதியில் உள்ள சுவாமி ‘நாராயண் காடி சன்ஸ்தான்’ என்ற அமைப்பு அந்த சர்ச்சை விலைக்கு வாங்கி கோயிலாக மாற்றியுள்ளது.
இப்போது அந்த சர்ச் சுவாமி நாராயணன் கோவிலாக மாற்றப்பட்டுள்ளது. இந்த கோவில் 3 ஆயிரம் சதுர அடி கொண்டது. இங்கு சுவாமி நாராயண் சிலை கடந்த மாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதுதவிர அனுமன் மற்றும் விநாயகர் சிலைகளும் அங்கு நிறுவப்பட்டுள்ளன. இதற்காக நாராயண் காடி சன்ஸ்தான் அமைப்பு 10 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளது.
ஏற்கனவே இதுபோன்று கலிபோர்னியா மற்றும் கென்டக்கியில் 2 தேவாலயங்கள் இந்து கோவில்களாக மாறியிருக்கின்றன. இப்போது இந்த சர்ச்சும் இந்து கோயிலாக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து கோயிலாக மாறியுள்ள அமெரிக்க சர்ச்சின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. இது தவிர இங்கிலாந்து நாட்டின் லண்டன் பகுதியில் உள்ள ஒரு தேவாலயமும், மான்செஸ்டர் அருகேயுள்ள ஒரு தேவாலயமும் ஏற்கனவே கோயிலாக மாற்றப்பட்டுள்ளன. இதன் மூலம் உலகில் மொத்தம் 5 கிறிஸ்தவ தேவாலயங்கள் இந்து கோவிலாக மாற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.