திருவள்ளூர் அருகே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது பந்து பட்டு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் அருகே புன்னப்பாக்கம் பகுதியில் வசித்து வந்த இளைஞர் லோகநாதன் அவரது வயது 24. இவர் ஆந்திராவில் இருக்கும் சட்டக் கல்லூரியில் படித்து வந்த நிலையில் நேற்று அவருடைய நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவதற்காக கிரிக்கெட் விளையாட சென்றுள்ளார். அப்போது பேட்ஸ்மேன் அடித்த பந்தை லோகநாதன் பிடிக்க முயன்றபோது பந்து அவரது மார்பில் பலமாக தாக்கியது . பந்து தாக்கிய அடுத்த நிமிடமே லோகநாதன் மயக்கமடைந்துள்ளார். அங்கு அவருடன் விளையாடிக் கொண்டிருந்த நண்பர்கள் உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
லோகநாதனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து வந்த போலீசார் லோகநாதனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் .நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பிரேத பரிசோதனை செய்ய தாமதமாகி உள்ளது . அதனால் லோகநாதனின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸ்காரர்கள் உடனே பிரேத பரிசோதனை செய்ய உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது என்று உறுதி அளித்த பின்னர் சாலை மறியல் கைவிடப்பட்டது கிரிக்கெட் விளையாடிய போது மாணவன் உயிரிழந்த சம்பவம் சுற்று வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
