தன் ரசிகர்களிடம் தான் அரசியலுக்கு வருவதாக கடந்த 25 ஆண்டுகளாகவே பரபரப்பாக வைத்திருந்தவர் ரஜினி. சூப்பர் ஸ்டார் என புகழப்படும் வார்த்தைக்கு இணங்க அவர் நடிப்பிலும் சூப்பர் ஸ்டார் தான். இன்று இந்தியாவிலேயே ரஜினி அளவுக்கு சினிமாவில் பல பரிணாமங்களை எடுத்தது ரஜினி மட்டும் தான்.
ஆம் கருப்பு, வெள்ளை படங்களின் காலத்தில் அறிமுகம் ஆனார் ரஜினி. தொடர்ந்து கலர் படங்களின் காலத்தில் உச்ச நடிகராக வலம் வந்தார். தொடர்ந்து அனிமேசன் தலையெடுத்தக் காலத்தில் கோச்சடையான் அனிமேசன் படமாக வந்தது. 2 டி தொழில் நுட்பத்தில் சங்கர் இயக்கத்தில் 2.0 படத்தில் நடித்தார். இத்தனை பெரிய வாய்ப்புகள் இந்தியாவிலேயே வேறு எந்த நடிகருக்கும் வாய்த்தது இல்லை. சினிமாவில் ரஜினியிசம் அந்த அளவுக்கு எடுப்பட்டதன் திரைமறைவில் ரஜினியின் அரசியல் வருகை காத்திருப்பும் இருந்தது.
70 வயதான ரஜினி கட்சி தொடங்குவார் என கடந்த 25 ஆண்டுகளாக அவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். விஜய், அஜித் என இப்போது பீக்கில் இருக்கும் நடிகர்களைப் போலவே ரஜினி படத்தின் முதல் காட்சியின் டிக்கெட் விலையும் இன்னும் உச்சத்தில் இருக்கிறது. அதற்கு திரையில் ரஜினி செலுத்தும் ஆதிக்கம் அதாவது அவரது நடிப்பு மட்டுமே காரனம் அல்ல. கடந்த 25 வருடங்களாகவே ரஜினி தன் மீது வம்படியாக இழுத்துப் போர்த்தியிருக்கும் அரசியலும் தான் காரணம். பாபா படத்தில் தனக்கென ஒரு ஸ்டைலான விரல் முத்திரையைக் காட்டிய ரஜினியை நோக்கி கொண்டாடியது அவரது ரசிகர் படை. அதிமுக இருவிரல்களையும், திமுக 5 விரல்களையும் காட்டியதற்கு மாற்றாக பாபா பட முத்திரையைப் பார்த்தனர் ரசிகர்கள்
ஏதோ ஒருவகையில் திரைத்துறையில் இருந்து அரசியல் நோக்கி நகர்வதற்கான தூபத்தை போட்டுக் கொண்டே இருந்தார் ரஜினி. அதை நம்பியே கடந்த மூன்றாண்டுகளும் தன் தலைவர் கட்சி ஆரம்பித்து விடுவார் என ஆழமாக நம்பினர் ரசிகர்கள். கபாலி, காலா, பேட்ட, தர்பார் என அரசியல் அறிவிப்புக்குப் பின் ரஜினி நடித்த படங்கள் ஜெட் வேகத்தில் வந்தன. முன் எப்போதும் விட, ரஜினியின் படங்கள் அரசியல் பிரவேச அறிவிப்புக்குப் பின் அடுத்தடுத்து வந்தன. தான் திரையில் கொண்டாடிய நடிகன், அரசியல் கட்சியின் தலைவன் ஆகிவிடுவான்..நாளை அவரே முதல்வர் என நம்பியது ரசிகர் படை. அதனாலேயே தியேட்டர்களை பிளக்ஸ்கள் நிறைந்தது.
ஆனால் அந்த கனாவில் தேர்தல் நெருங்கும் நிலையில் கல் எரிந்து இருக்கிறார் ரஜினி. அவரது இந்த அறிவிப்பால் ரஜினி மக்கள் மன்றத்தின் மூன்று மாவட்டச் செயலாளர்கள் திமுகவில் இணைந்துள்ளனர். அதில் தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்றச் செயலாளர் ஸ்டாலினின் இணைப்பு சாமானியமாகக் கணக்கில் கொண்டுவிட முடியாது. ஸ்டாலின் தான் ரஜினியின் தூத்துக்குடி ஸ்டெர்லைட் வருகையை திட்டமிட்டு வடிவமைத்தவர். அப்படி ரஜினி நம்பிய விஸ்வாசிகளே அவரை கை கழுவிவிட்டு சென்ற நிலையில் தான் மன்றப்பதவியை ராஜினாமா செய்துவிட்டு விரும்பிய கட்சிகளில் சேரலாம் என ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்தே அறிவிப்பு வந்திருக்கிறது.
ரஜினியின் அண்ணாத்தே படம் 80 சதவிகித சூட்டிங் நிறைவடைந்திருக்கும் நிலையில் மக்கள் மன்றத்தின் முக்கிய நிர்வாகிகள் எல்லாம் ஒதுங்கிவருகின்றனர். அண்ணாத்தே ஆடுறான் ஒத்திக்கோ..ஒத்திக்கோ எனத் துவங்கும் கமல் பாடல்…ரஜினிக்காக, அண்ணாத்தே ஆடலை ஒத்திக்கோ…ஒத்திக்கோ என ஆகியிருக்கிறது. இதனால் அண்ணாத்தே போணியாகுமா என கேள்வியும் எழுந்துள்ளது.