பாரம்பர்ய முறையிலான விவசாய நுட்பங்களில் இருந்து விலகி கார்ப்பரேட் நிறுவனங்களின் விதை, உரம் என பயன்படுத்தி மண் மலடாகிவிட்டதையும், விவசாயம் சுயசார்புடையதாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் பேசும் படம் தான் பூமி.

பேராண்மை, நிமிர்ந்து நில் படங்களின் வரிசையில் வலுவான கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார் ஜெயம் ரவி. எட்டாம் வகுப்பில் இருந்தே விஞ்ஞான ஆர்வத்தோடு வளரும் நாயகன் ஜெயம் ரவி, நாசாவில் வேலை செய்கிறார். செவ்வாய் கிரகத்தில் பயிர்களை விளைவிக்க முடியும், மனிதர்கள் வாழ முடியும் என்பதை தன் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கிறார் ஜெயம் ரவி. அதுதொடர்பான ஆய்வுக்கு செவ்வாய் கிரகத்தில் மூன்று ஆண்டுகள் தங்கும் பணிக்கு அமர்த்தப்படுகிறார். இப்படியான சூழலில் சொந்த ஊரான நெல்லைக்கு வந்தவருக்கு உள்ளூரிலேயே விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் அவதிப்படுவதும், போராட்டங்கள் தொடர்வதும் தெரிய வருகிறது.

கிராமத்தில் விவசாயத்தின் மீது ஆர்வம்வர தனக்கு பேருதவியாக இருந்த தம்பி ராமையா பயிர் காய்ந்து, அரசால் உரிய இழப்பீடும் கிடைக்காமல் போராடியும் பலன் இல்லாததால் தற்கொலை செய்த சம்பவம் ஜெயம் ரவியை ரொம்பவே பாதிக்க செவ்வாயில் பயிர் விளைய வைப்பதை நோக்கமாகக் கொண்ட நாயகன் ஜெயம் ரவி, தன் சொந்த மண்ணில் பயிர் விளைவிக்கும் முயற்சியில் இறங்குகிறார். இதற்க்காக நாசா வேலையையும் விட்டுவிடுகிறார். விவசாயத்தில் நாயகன் ஜெயம் ரவி ஜெயித்தாரா? விவசாயத்தை சூழ்ந்திருக்கும் கார்ப்பரேட் வலையில் இருந்து எப்படி மீண்டார் என்பதாக நீள்கிறது திரைக்கதை.

தன் பாத்திரத்தை உணர்ந்து வலுவான நடிப்பைத் தந்திருக்கிறார் ஜெயம் ரவி. விவசாயத்தையே நம்பியிருக்கும் வேலுச்சாமியாக தம்பி ராமையா, அரசியல்வாதியாக ராதா ரவி, மாவட்ட ஆட்சியராக ஜான் விஜய் ஆகியோரும் நிறைவான நடிப்பைத் தந்துள்ளனர். படத்தில் சதீஸ் இருக்கிறார். ஆனாலும் நகைச்சுவை காட்சிகளே இல்லாமல் வறட்சி நிலவுகிறது. நாயகி நித்தி அகர்வால் சும்மா வந்து போகிறார். முதல் இருபது நிமிடங்கள் இலக்கே இல்லாமல் பயணிக்கும் கதை விவசாய பிரச்னைக்குள் வரும்போது சூடுபிடிக்கிறது. மரணத்தின் விளிம்பில் இருக்கும் தம்பி ராமையா என்னை காப்பாத்தி மறுபடி கொன்னுடாதப்பா என இறைஞ்சு இடத்தில் விவசாயிகளின் வலி முகத்தில் அறைகிறது. சரண்யா பொன்வண்ணனை இன்னும் கொஞ்சம் பயன்படுத்தியிருக்கலாம் .

அரசு சொல்வதை மட்டுமே நம்பி அளவுக்கு அதிகமாக ரசாயன உரத்தைக்கொட்டி அதனால் பயிர்கள் சத்து அற்றதாக விளைவதையும், விவசாயிகளூக்கு ஏற்படும் நஷ்டத்தையும் முகத்தில் அறைவது போல் காட்டியிருக்கிறார் இயக்குநர். உயர்விளைச்சல் என்னும் பெயரில் மரபணு மாற்றப்பட்ட விதைகளைக் கொடுத்து மண்ணை மலடாக்கியிருப்பது குறித்தும், அதன் பின்னால் இருக்கும் கார்ப்பரேட் அரசியலை பேசும் இடத்திலும் கவனிக்க வைக்கிறார் இயக்குனர் லெட்சுமணன்.

விவசாயத்தை காப்பத்த கடவுளுக்கே வக்கு இல்லை. யார்கிட்ட போய் முறையிடுறது? கோழையின் கடைசி ஆயுதம் தற்கொலை, சுதந்திரத்துக்கு முன்னால் விவசாயிகள் கொடுத்த நிலவரியில் தான் அரசே இயங்கியது, தூரத்துல இருந்து பார்க்கும்போது தான் என் நாடு அழகு. பக்கத்தில் இருந்து பார்க்கும்போதுதான் அது எவ்வளவு அழியுதுன்னு தெரியுது. விவசாயி கடனில் செத்தா நாமெல்லாம் தண்ணியில்லாம சாவோம்.’ என்பது உள்ளிட்ட பல இடங்களில் வசனங்களில் சமூக அக்கறை தெறிக்கிறது.
படிக்கப்போறியா? மாடு மேய்க்கப்போறியான்னு சின்ன வயசுலயே தப்பா சொல்லிக் கொடுத்துட்டாங்க என படத்தில் ஒரு இளைஞர் பேசும் வசனம் படத்தில் விவசாயத்துக்கு கொடுத்திருக்கும் முக்கியத்துவத்துக்கு ஒருசோறு பதம். கார்ப்பரேட்கள் இயற்கை விவசாயத்துக்கு எதிராக நடத்தும் யுத்தத்தையும் இயக்குனர் துணிச்ச்லாக தோல் உரித்திருக்கிறார். கோயில் கலசத்தில் இருக்கும் பாரம்பய விதைகள், நெல் ஜெயராமன், நம்மாழ்வார் போன்றோர் நடத்திய விதைத் திருவிழாக்கள் தொடர்பான காட்சிகளை சேர்த்ததோடு டைட்டில் கார்டில் அவர்களுக்கும் நன்றி சொல்லி பெருமை சேர்த்து இருக்கிறார்.

தமிழன் என்று சொல்லடா..கடைகண்ணாலே ரசித்தேன், உழவா..உழவா பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. உழவா பாடல் வேறலெவலில் எனர்ஜி ஏற்றுகிறது. திரைக்கதையின் ஓட்டத்தில் ஆங்காங்கே செயற்கைத்தனம் துருத்திக் கொண்டு நிற்கிறது. வரிசையாக வந்து விழும் விவசாயத் தகவல்கள் ஜெயம் ரவி வகுப்பு எடுப்படுபோல் சில இடங்களில் தோற்றத்தைத் தருகிறது. திரைமொழியை இன்னும் கொஞ்சம் நளினப்படுத்தி இருந்தால் இந்த பூமி ஆண்டிருப்பான். இருந்தும், விவசாயிகளிடமே இருக்க வேண்டிய விதை உரிமை, மண் புழு உரம், தொழுவுறத்தின் பெருமைகள், நம் பாரம்பர்யத்தின் அருமையை சொல்லியிருக்கும் இந்த பூமி…விவசாயிகளின் சாமி! ஒருமுறை நிச்சயம் தரிசிக்கலாம்.