டில்லி எல்லையில் கடந்த 65 நாட்களாக விவசாய சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்திவந்தார்கள் விவசாயிகள். இந்த நிலையில் குடியரசு தினமான இன்று போலீஸார் விதித்த நிபந்தனையோடு டிராக்டர் பேரணி நடத்தினர். ஆனால் அந்த பேரணி போலீஸ் தடுப்புக்களை மீறி டில்லிக்குள் புகுந்தது. இதனால் போலீஸார் தடியடி மற்றும் கண்ணீர் புகைகளை வீசினர். இதில் ஏற்பட்ட வன்முறையில் விவசாயி ஒருவர் பலியாகியுள்ளார். நிலைமை மோசமாகி வருவதால் டில்லியில் பதட்டம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்வியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், “வன்முறை என்பது எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு அல்ல. இதில் யாராவது காயமடைந்தால், அது நமது சேதத்திற்கான சேதமாகும்.
நாட்டின் நலனுக்காக வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெறுங்கள்” என கூறியுள்ளார்.
இந்த நிலையில் குடியரசுத் தலைவர் இல்லம், நாடாளுமன்ற வளாகம், பிரதமர் இல்லம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையம், ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று நள்ளிரவு முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடியும் வரை தில்லியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக தில்லி காவல்துறை அறிவித்துள்ளது.