நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசனுக்கு ஒருவிபத்தில் காலில் ஏற்பட்ட காயதிற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மற்றொரு அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அட்மிட் ஆக உள்ளதாக கமல்ஹாசன் சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கமல்ஹாசனுக்கு ஆப்பரேஷன் வெற்றிகரமாக நடந்ததாக அவரது மகள்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கமல்ஹாசனின் மகள்கள் ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “இன்று காலை ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் மருத்துவர் மூர்த்தி ஒருங்கிணைப்பில், எலும்பியல் மருத்துவசிகிச்சை நிபுணர் மருத்துவர் மோகன்குமார் தலைமையில் எங்கள் அப்பாவுக்கு காலில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அப்பா நலமுடன் உற்சாகமாக இருக்கிறார்.
அப்பாவை மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும், மருத்துவமனை நிர்வாகமும் நல்லமுறையில் பார்த்துக் கொள்கிறார்கள். நான்கைந்து நாட்களுக்கு பிறகு அப்பா வீடு திரும்புவார். சில நாட்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் மக்களை சந்திப்பார். மகிழ்விப்பார். அனைவரது அன்புக்கும், பிரார்த்தனைகளுக்கும் எங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.