கன்னியாகுமரி கடற்கரையில் நூற்றுக்கணக்கான கடைகள் உள்ளன. இந்த கடைகளில் கலை பொருட்கள், வாசனை திரவியங்கள், துணிமணிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா ஊரடங்குக்கு பிறகு கன்னியாகுமரி சுற்றுலாதலம் சில வாரங்களுக்கு முன்புதான் திறக்கப்பட்டது.

கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பில் இருந்து எப்படியாவது மீண்டு விடலாம் என்று வியாபாரிகள் நினைத்திருந்தனர். ஆனால் தீவிபத்து அவர்களது வாழ்வாதாரத்தை புரட்டி போட்டுவிட்டது. இன்று அதிகாலை காந்தி மண்டபம் அருகில் உள்ள கடைகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சுமார் 70-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சாம்பலானது.

இதுகுறித்து தகவலின் பேரில் கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் உள்ள தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்