‘ஆனந்த விகடன்’ வழங்கும் ஃபேன் மீட் வித் சித்து’ நிகழ்ச்சி நவம்பர் 26-ம் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
“மே 2 என்னுடைய பிறந்த நாள். இந்தப் பிறந்த நாளை என் ரசிகர்களுக்கு மத்தியில் கொண்டாடனும்னு ஆசைப்படறேன். சிம்பிளாக் கொஞ்சம் ரசிகர்களைக் கூப்பிட்டு வீட்டுலயே கொண்டாடிடலாம்தான். ஆனா என்னுடைய வாழ்க்கையில விகடனுக்கு முக்கியமான பங்கு இருக்கு. அதனால விகடன் முன்னிலையில அந்த நிகழ்ச்சி நடந்தா நல்லா இருக்கும்னு ஆசைப்படறேன்’’ -கடந்த ஜனவரியில் சித்ரா நம்மிடம் சொன்ன வார்த்தைகள் இவை.
’ஆனந்த விகடன்’ விருதுகள் வழங்கும் விழாக்களில் ரெட் கார்ப்பெட் முதலான நிகழ்ச்சிகள், அவள் விகடனின் ஜாலி டே என சித்ரா விகடனுக்கு ஏற்கெனவே நன்கு பரிச்சயமானவர் என்பதால் அவர் ஆசைப்பட்ட அந்த ரசிகர் சந்திப்புக்கும் திட்டமிடப்பட்டது.
ஆனால், மார்ச்சில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு விட்டது. இதனால் மே 2-ம் தேதி தன் பிறந்த நாளை மிகவும் சிம்பிளாக வீட்டிலேயே கொண்டாடினார் சித்ரா.
அதன் அடுத்த சில மாதங்களில்தான் ஹேமந்த் ரவி என்பவருடன் சித்ராவுக்குத் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
பிறகு, கொரோனா ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்த்தப்பட்ட நிலையில், சில வாரங்களுக்கு முன் மீண்டும் நம்மைத் தொடர்புகொண்ட சித்ரா, “பிறந்த நாளைத்தான் ரசிகர்களுடன் கொண்டாட முடியாமப் போச்சு. இப்ப என் கல்யாணத்துக்கு முன்னாடி ரசிகர்களைச் சந்திக்கலாம்னு நினைக்கிறேன். நான் மறுபடி மறுபடி இதைப் பேசறேன்னா அதுக்குக் காரணம் இருக்கு. இன்னைக்கு நாலு பேருக்கு என்னைத் தெரியுதுன்னா காரணம் இந்த ரசிகர்கள்தானே? அவங்களுக்கு ஏதாச்சும் செய்யணும்னு விரும்புறேன்’’ என்றார்.
மறுபடியும் ரசிகர் சந்திப்புக்கு நாள் குறிக்கப்பட்டது. ‘ஆனந்த விகடன்’ வழங்கும் ‘ஃபேன் மீட் வித் சித்து’ நிகழ்ச்சி நவம்பர் 26 வியாழக்கிழமை சென்னையில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
நிகழ்ச்சிக்கான எல்லா ஏற்பாடுகளும் தயாராக இருந்த நிலையில் நிவர் புயல் வந்தது.
மழையும் காற்றும் ஒருசேர வெளுத்து வாங்கியதில் ரசிகர்கள் வந்து செல்வதில் சிரமம் ஏற்படும் என்பதால், வேறு வழியில்லாமல் மீண்டும், அந்த நிகழ்வை தள்ளிப் போட வேண்டிய சூழல்.
அப்போது வருத்தப்பட்ட சித்ரா “விடுங்க சார், புது வருஷம் புத்துணர்ச்சியோட ஆரம்பிக்கலாம்’’ என்றார்.
மூன்றாவது முறையாகவும் காலம் ஏமாற்றி விட்டது.