ஓசூர் அருகே பாகலூர் சாலையில் உள்ள முத்தூட் நிதி நிறுவனத்தில் நேற்று வாடிக்கையாளர் போல 5 நபர்கள் சென்றுள்ளனர். அப்போது திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை காட்டி அங்கிருந்த மேலாளர் மற்றும் 4 பணியாளர்களை மிரட்டி, அவர்களது கைகளை கட்டிப்போட்டு, வாயில் டேப் ஒட்டியுள்ளனர். பின்னர், அங்குருந்து 7.40 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் 96 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். இந்த நிலையில் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய 6 பேர் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. அவர்களிடம் இருந்து 8 துப்பாக்கிகள், கத்தி, சுமார் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக காவல் துறையின் துரித நடவடிக்கைக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு காவல்துறையினரின் மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இயங்கி வரும் முத்தூட் நிறுவனத்தில் நேற்று நடைபெற்ற கொள்ளையில் திருடு போன 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 25 கிலோ தங்கத்தையும், கொள்ளையர்களையும் துரிதமாக செயல்பட்டு 18 மணி நேரத்தில் பிடித்த தமிழ்நாடு காவல்துறையினருக்கு, குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறைக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.