மதுரை தோப்பூரில் ரூபாய் 1,264 கோடி மதிப்பில் சுமார் 200 ஏக்கர் நிலத்தில் ஏய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என 2018 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரியில் இந்த மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது. இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு ஜனவரியில் மருத்துவமனை அமைய உள்ள சுமார் 5.5 ஏக்கர் நிலத்தில் சுற்றுச் சுவர் அமைக்கும் பணி துவங்கியது.
இந்நிலையில் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜன் என்பவர் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்திடம் மதுரை ஏய்ம்ஸ் மருத்துவமனை எப்போது கட்டப்படும், மருத்துவமனை கட்டுவதற்கான கடன் உதவி கிடைத்ததா என்பன உட்பட 17 கேள்விகளை கேட்டு தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்தார்.
இதற்கு பதிலளித்துள்ள அமைச்சகம் ஏய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான இடத்தை மாநில அரசு இன்னும் மத்திய அரசிடம் ஒப்படைக்கவில்லை என்றும், மருத்துவமனை கட்டுவதற்கு ஜப்பான் நிறுவனத்திடம் கேட்கப்பட்ட கடன் ஒப்பந்தம் இன்னும் முடிவாகவில்லை என்றும் பதிலளித்துள்ளது.