விவசாயிகளை பாதிக்கக்கூடிய பிரச்சனைகள் குறித்தான அவரது கோரிக்கைகள் ஜனவரி 2021 க்குள் மத்திய அரசால் தீர்க்கப்படவில்லை என்றால் உண்ணாவிரத போராட்டம் இருக்க போவதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். மேலும் அந்த போராட்டம் அவரது கடைசி போராட்டமாக இருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
விவசாய உற்பத்தியாளர்களுக்காக தான் கடந்த மூன்று ஆண்டுகளாக பல போராட்டங்களை நடத்திவருவதாகவும், ஆனால் அவர்களில் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அரசு எதுவும் செய்யவில்லை என்று அன்னா ஹசாரே மஹராஷ்டிரா மாநிலம் அக்மத்நகர் மாவட்டத்தில் உள்ள தனது கிராமமான ரலேகான் சித்தியில் செய்தியாளர்களிடம் பேசும் போது தெரிவித்தார்.
”அரசு வெறும் வெற்று வாக்குறுதிகளை தான் தருகிறது அதனால் எனக்கு அரசின் மீது நம்பிக்கை இல்லை. எனது கோரிக்கையின் மீது மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என பார்ப்போம். அவர்கள் ஒரு மாதம் கால அவகாசம் கேட்டுள்ளனர், எனவே நான் அவர்களுக்கு ஜனவரி மாத இறுதி வரை கெடுவழங்கியுள்ளேன். ஒருவேளை என்னுடைய கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால், நான் எனது உண்ணாவிரத போராட்டத்தை திரும்ப தொடங்க உள்ளேன். இது என்னுடைய கடைசி போராட்டமாக இருக்கும்”, என 83 வயதான அன்னா ஹசாரே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
எம் எஸ் சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தனது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தான் உண்ணாவிரத போராட்டத்தை மீண்டும் தொடங்க போவதாக எச்சரித்து அன்னா ஹாசாரே மத்திய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தார்.
வேளான் சட்டங்களை திரும்ப பெறக் கூறி போராட்டம் நடத்திவரும் விவசாயிகளின் பாரத் பந்த் கோரிக்கையை ஏற்று கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி அன்னா ஹசாரே ஒருநாள் உண்ணாவிரதம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.