தே.மு.தி.க கட்சியின் பொருளாளரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா தருமபுரியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “சசிகலா குணமடைந்து வீடு திரும்புவதுடன், அரசியலுக்கும் வர வேண்டும் என்பதே எனது கருத்து. ஒரு பெண்ணாக அவர் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன்.
எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராக தேர்தெடுக்கப்படவில்லை. அவர் அதிமுகவினரால் கட்சி சார்பில் தேர்வு செய்யப்பட்டார். 100 நாள்களில் மக்களின் பிரச்னை தீரும் என்று கூறும் ஸ்டாலின், அவரது கட்சி ஆட்சியில் இருந்தபோது என்ன செய்தார். எனவே, வாக்குறுதி யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம் அதை நிறைவேற்றுவது ரொம்ப முக்கியம். கமல் ஹாசனுக்கு மக்கள் செல்வாக்கு எவ்வளவு உள்ளது என்பது இந்தத் தேர்தலில் தெரிய வரும். அதிமுக கூட்டணியில் எற்கெனவே கொடுக்கப்பட்ட 41 தொகுதிகளை இந்தத் தேர்தலிலும் எதிர்பார்க்கிறோம்” என்றார். ஏற்கனசே சசிகலாவை அதிமுகவினர் எதிர்ப்பது வருத்தமாக உள்ளது என கருத்து தெரிவித்திருந்தார் பிரேமலதா. தேர்தல் நெருங்கும் சமயத்தில் பிரேமலதாவின் பேச்சு அதிரடியாக இருப்பது அதிமுகவினரை குழப்பமடைய செய்துள்ளது.