உத்தரபிரதேசத்தில் பரவெளி மாவட்டத்தை சேர்ந்த ஹபிகஞ்ச் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவர் இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் இரு தினங்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறி திருமணம்செய்து கொண்டனர். இதில் அந்தப் பெண் இந்து மதத்திற்கு மாறினார்.

தங்கள் மகள் இந்து மதத்திற்கு மாறியதால் ஆத்திரம் அடைந்த பெண்ணின் குடும்பத்தார் அந்த தம்பதியை தேடியுள்ளனர். இதையறிந்து அந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த தம்பதிகள் தங்களுக்கு பாதுகாப்பு தரும்படி கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து இருவீட்டாரையும் அழைத்து போலீஸ்காரர்கள் பேசியதால் அவர்கள் இருவரும் சமாதானம் அடைந்து வீடு திரும்பினார்.இதேபோல் பஹேதி பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் பெண்ணும் இந்து மதத்தைச் சேர்ந்த இளைஞரை கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் செய்துள்ளார். இவரும் இந்து மதத்திற்கு மாறியதால் பெண்ணின் குடும்பத்தினர் தொடர்ந்து கொலை மிரட்டல் கொடுத்து வந்துள்ளனர். இதனையடுத்து அந்த தம்பதி கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்து அமைப்பினரும் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்து வந்துள்ளனர். அதே நேரம் அந்தப் பெண்ணின் பெற்றோர் தங்கள் மகளை அவரது கணவன் கடத்திச் சென்றதாக புகார் கொடுத்துள்ளனர்.இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.