ரஜினி ஒரு பிரமாண்டமான வர்த்தகப் பொருள். 70 வயதிலும் அவருக்கான வேல்யூ அப்படியே இருப்பதுதான் அவரின் பலம்.கருப்பு, வெள்ளை காலம் எனப்படும் பிளாக் அண்ட் ஒயிட் சினிமாவில் தொடங்கி, கலர் படம் காலம் வரை திரையில் கோலோச்சிக் கொண்டிருக்கிறார். கோச்சடையானில் அனிமிசேனாகவும் வந்தார். 2.0 திரைப்படத்தில் 2 டி தொழில்நிட்பத்திலும் நடித்தார். இத்தனை காலத்தையும் வேறு எந்த தென்னிந்திய நடிகர்களும் சாத்தியப்படுத்தியதில்லை.
1995 ஆம் ஆண்டு பாட்ஷா திரைப்படம் வெளியான போது ரஜினிக்கான அரசியல் தேவை மிதமிஞ்சி இருந்தது. பாட்ஷா திரைப்பட தயாரிப்பாளரும், அன்றைய அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பனை மேடையில் வைத்துக்கொண்டே, ‘தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் தலைதூக்கிவிட்டது’ என பேசினார் ரஜினி. இதனால் ஆர்.எம்.வீரப்பன் அமைச்சர் பதவியையே இழந்தார். 1996ல் நடந்த தேர்தலில் ரஜினியின் தாக்கம் அதிகம் இருந்தது. அப்போது அவர் அரசியலுக்கு வருவதற்கு ஏற்ற காலம் இருந்தது. இருந்தும் ரஜினி அதை ஏற்காமல் எட்டி உதைத்தார்.
ஆனால் அவரது ரசிகர்கள் சோர்ந்து போகவில்லை. ரஜினி அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் ஆழமாக நம்பினர். ரஜினியின் பெயரை நெஞ்சிலும், கையிலும் பச்சைக் குத்திக்கொண்ட ரசிகர்கள் அவரை அண்ணணாகவே பார்த்தனர். பாபா படத்தில் முத்திரை சின்னத்தாஇ காட்டிய போது, அதுதான் அவரது அரசியல் எம்ளம் என கொண்டாடியது ரசிகர் படை. 90 களில் தொடங்கி முப்பது ஆண்டுகள் ஒருவர் கட்சி தொடங்க ரசிகர்கள் காத்திருந்தது ரஜினிக்கு மட்டுமே நடந்தது.
ரஜினி 2017ல் அரசியல் கட்சி துவங்குவதாகச் சொன்னார். அதில் இருந்து கட்சி துவங்கும் தேதியை அறிவிக்க மூன்று ஆண்டுகள் எடுத்துக்கொண்டார். கபாலி, காலா போன்ற படங்களில் மண்ணுரிமைக்கு போராடிக் கொண்டே, ஸ்டெர்லைட் போராட்ட்டத்தை தவறு என்றார். கொள்கை, சிந்தாந்த ரீதியாக ரஜினி எதையும் முன்வைக்காவிட்டாலும் ரஜினி என்னும் பிம்பம் தமிழகத்தில் அவருக்கான இடத்தை அப்படியே பிடித்து வைத்திருந்தது. ரஜினிக்கு பின்பு அரசியல் அறிவிப்பு கொடுத்துவந்த கமல் மக்கள் நீதி மய்யத்தை துவங்கி, ஒரு பாராளுமன்றத் தேர்தலையும் சந்தித்துவிட்டார்.
ரஜினியும் சும்மா இருந்துவிடவில்லை. ஆள், படை, அம்பாரி என போருக்கு திரட்டுவது போல் மாவட்ட நிர்வாகிகளை மக்கள் மன்றத்துக்கு அறிவித்தார். தொடர்ந்து, தேர்தலுக்கான பூத் கமிட்டிகளை அமைத்தார். கிளை கழகங்கள் முழுவீச்சில் அமைக்கப்பட்டன. கடைசியில் கட்சி துவங்கும் தேதியை அறிவித்தார். அடுத்த சில தினங்களிலேயே ஹைதராபாத் அப்பல்லோவில் சிகிட்சையில் இருந்து வந்து கட்சி இல்லை எனச் சொல்லியிருக்கிறார்.

ரஜினி கட்சி தொடங்காமல் இருக்க முன்வைத்த முக்கிய விசயம் ஒன்று இருக்கிறது. நான் ஏற்கனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிட்சை செய்தவன். எனக்கு மாறுபட்ட ரத்த அழுத்தம் இருக்கக் கூடாது. உரிய பாதுகாப்பு நடைமுறைகளைச் செய்தும், கரோனா எங்கள் யூனிட்டில் நான்கு பேருக்கு வந்துவிட்டது என நீட்டி முழங்கியது அந்த அறிக்கை. இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், ரஜினி அரசியலுக்குத்தான் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறாரே தவிர சினிமாவுக்கு அல்ல.
கரோனா பரவல், ரஜினியின் உடல்நிலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அண்ணாத்தே சூட்டிங் பிப்ரவரி மாதம் மீண்டும் துவங்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அப்படியானால் ரஜினிக்கு உடல்நிலை குறித்த அச்சம் இப்போது எங்கே போனது? ரஜினி கட்சி துவங்குவார் என நம்பி மக்கள் மன்றத்தில் லட்சக்கணக்கான பணத்தை விட்ட பலர் இருக்கிறார்கள். அவர்களை அம்போவென விட்டுவிட்டு சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்து தன் சம்பளப்பாக்கியை வாங்க நடிக்க நாள் குறித்துவிட்டார் ரஜினி? ஆனால் அவர் அரசியல் பற்றிப் பேசியதே நடிப்பா? என கன்னத்தில் கைவைத்து உட்கார்ந்து இருக்கின்றனர் அவரது ரசிகர்கள்.

இதுகுறித்து அகம் தமிழிடம் பேசிய ரஜினியின் மக்கள் மன்ற நிர்வாகி ஒருவர், ‘கரோனா நேரத்தில் மட்டும் 7 லட்ச ரூபாய்க்கு நலத்திட்ட உதவி வழங்கினேன். ஏற்கனவே இருந்த கட்சியில் இருந்து விலகி, தலைவரின் ரசிகர் என்ற முறையில் மக்கள் மன்றத்தில் இணைந்தேன். ஆனால் என்னைப் போன்ற பலரின் அரசியல் வாழ்க்கையையே தலைவர் அஸ்தமனம் ஆக்கிவிட்டார்.’’என்றார்