டில்லியில் கடந்த 60 நாட்களுக்கும் மேல் போராட்டம் நடத்திய விவசாயிகள் இன்று டிராக்டர் பேரணி நடத்தினர். டில்லியின் முக்கிய சாலைகளில் விவசாயிகள் தொடர்போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். போலீஸார் விதித்த கட்டுப்பாடுகளை மீறி டிராக்டர் பேரணிகள் அத்துமீறின. இதனால் பல இடங்களில் தடியடியும் சில இடங்களில் கண்ணீர் புகைக்குண்டும் வீசப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு விவசாயி உயிரிழந்தால் தற்போது அங்கு பதட்டமான சூழல் நிலவுகிறது. இதுகுறித்து விவசாய சங்கத்தை சேர்ந்த ராகேஷ் டிக்கிட் கூறுகையில், “டில்லியில் இன்று வன்முறையில் ஈடுபட்டவர்களை நாங்கள் அறிவோம். அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். அரசியல் கட்சியை சேர்ந்த சிலர் போராட்டத்தை சீர்குலைக்கும் நோக்கில் இந்த செயலை செய்துள்ளார்கள்” என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில் டில்லியில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும்வரை இணையதள சேவையை வழங்க வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.