அதிகரித்து வரும் அங்கீகாரமற்ற டிஜிட்டல் கடன் வழங்கும் தளங்கள் மற்றும் ஆப்கள் விரைவாக எளிய வழியில் கடன் தருவதாக தனிநபர்கள் மற்றும் சிறு தொழில் முனைவோரை ஏமாற்றி வருவதாக புகார்கள் வருகின்றன. மேலும் இவை கடன் பெற்றவர்களிடமிருந்து கடனை திரும்ப வசூலிக்க ஏற்றுக்கொள்ள முடியாத மோசமான வழிமுறைகளை பின்பற்றுவதும், கடன் பெற்றவரின் கைபேசியிலிருந்து அவருக்கு தெரியாமல் தகவல்களை திருடுவதும், ஒப்பந்தங்களை தவறாக பயன்படுத்தவும் செய்வதாகவும் புகார்கள் தெரிவிக்கின்றன.
ஆன்லைன் மூலமாகவோ அல்லது ஆப் மூலமாகவோ கடன் வழங்கும் இந்நிறுவனங்களை பற்றி முன்னரே நன்றாக தெரிந்துக் கொண்டு கடன் வாங்கவும், மேலும் பொது மக்கள் இவ்வாறாக கடன் வழங்கும் ஆப்கள் மற்றும் தளங்களிடம் ஏமாறாமல் இருக்கவும் இந்திய ரிசர்வ் வங்கி தனது அறிக்கையின் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் வாடிக்கையாளர்கள் ’உங்கள் வாடிக்கையாளர்களை தெரிந்துக் கொள்ளுங்கள்’ (know your customer) குறித்தான விவரங்களை தெரியாத நபர்கள் மற்றும் நிறுவனங்களிடம் கொடுத்து ஏமாறாமல் இருக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலும் இது தொடர்பான புகார்களை (https://sachet.rbi.org.in) என்ற இணையதள முகவரியில் தெரிவிக்கலாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் கடன் வழங்க இந்திய ரிசர்வு வங்கியால் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ள நிறுவனங்களின் பட்டியலை https://cms.rbi.org.in என்ற இணையதள முகவரியில் தெரிந்துக் கொள்ளலாம் எனவும், அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.